பிடிவாதக் கடிவாளம்



பள்ளியின் கடைசி மணியோசை நாலரை மணிக்கு ஒலித்தது. அதுவரை மந்தமாகவே இருந்த அமரனின் உள்ளம் உற்சாகத்தால் ததும்பியது. புத்தகப்பையை வாரி தோளின் மீது ஒரு புரமாக மாட்டிக்கொண்டு நண்பர்களுடன் வெளியேரும் நொடியில் அவனின் வகுப்பாசிரியை அனைவரையும் தடுத்து நிறுத்தினார். வகுப்பறையில் குறைந்த மின்னழுத்தத்தில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த மின்விளக்கைப் போல மாணவர்களின் முகங்கள் ஒளி குன்றின. ஏழாம் வகுப்பு காலாண்டு மதிப்பீட்டுச் சான்றிதழை வரிசைப்படி வழங்கி பதினைந்து நிமிடங்கள் தாமதப்படுத்தி அனைவரையும் வகுப்பாசிரியை வீட்டிற்கு விட்டார்.


பொறுத்துச் சோர்ந்த அக்காவான உமையாள் தம்பியன் தாமதத்தை வரவேற்கவில்லை. அவள் இடுப்பில் தன் கைகளை வைத்து, கண்களை விரித்து முறைத்து, கைக்கடிகாரத்தைப் பார்த்து அவளின் சங்கட்டத்தை வெளிக்காட்டினாள். மதிப்பெண் குறைவாக இருந்தமையாலும் அம்மாவிற்கும் தெரிந்து விடக்கூடாது என்பதனாலும் தாமத்தின் காரணத்தையும் மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கியதையும் அவன் அக்காவிடம் சொல்லவில்லை. காலையில் அப்பா அவசரமாக பணிக்குச் செல்லும் போது தக்க சமையத்தில் கையெழுத்தை வாங்கி விடலாம் என்று திட்டம் போட்டு வைத்திருந்தான்.

 

அவர்கள் நடந்து சென்ற சாலையின் நடைமேடைகளில் கடைகளும் வாகனங்களும் நம்பி வழிய, வீடற்றவர்களும் குழுமி குச்சிகளை நாற்புறமும் நட்டி சேலையை சுவராய்க் கட்டி வசித்து வந்தனர். சாலையிலேயே நடந்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருந்தது. சாலையில் கவனம் தேவை. இல்லையெனில் சக்கரத்தின் அடியில் சிக்கிய எலியைப் போல் நசுங்கி சாலையுடன் இணைய வேண்டியதுதான். சாலையின் ஓரமாகவே நடந்து பத்திரமாக ஒன்றன் பின் ஒருவராகச் சென்றனர். அக்காவை தம்பி முந்திக்கொண்டு ஓடினான்.

 

கல்யாண வரவேற்பில் பன்னீர் தூவப்படுவது போல மேகங்கள் கொசுத் தூரல்கள் தூவின. சிறிது நேரத்தில் மாலை வானை அணிவகுத்த குண்டு குண்டான கரியமேகங்கள் தங்களைப் பிழிந்து அடைமழையை புவியின் மேல் பூஜித்தன. அருகிலிருந்த ஆளற்ற வீட்டின் கையோடுகள் வேய்ந்த  கூரையின் மேல் கற்களை உருட்டிவிட்டது போல மழைத்துளிகள் வீழ்ந்து சிதறி இசைத்தன. கலைநயத்துடன்  செதுக்கப்பட்ட மரத் தூண்களுக்கு ஈரத்தால் நிறத்தைக்கூட்டி துளிகள் நிலத்தின் மீது மென்மையாக வடிந்தன. 

 

இருவரும் தொப்பலாக நனைந்து வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தனர். வீட்டை அடைந்ததும் உள்ளே நுழைந்து அடைக்கலம் தேடாமல் தோள்களில் சுமந்த புத்தகப்பைகளை மழை படா இடத்தில் வைத்துவிட்டு, குண்டுங்குழியுமான சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் ஆட்டம் போட்டனர். காலில் அணிந்த கொலுசுகள் ஒலிக்க குதித்துத் துள்ளினாள் உமையாள். அவள் மேல் சேற்றுத்தண்ணீரை தன் கால்களால் வாரியடித்தான் அமரன். அதற்கு எதிர்வினையாக அவளும் தன் கால்களால் தண்ணீரை உதைக்க, சிரித்துக் கொண்டிருந்த அமரனின் வாயில் நீர் புகுந்து கரித்துக்கசந்தது.

 

வேலையை முடித்து வந்தார் தாயான ஊர்மிலா. சீருடையைக் கூட மாற்றாமல் கொட்டும் கனழையில் மகனும் மகளும் ஆடுவதைக் கண்டு கோபமானார். ‘காய்ச்சல் வந்தாள் யார் கவனிப்பார்? இவர்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது’ என்று எண்ணியவாறே இருவரின் காதுகளைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்து வந்த போராட்டத்தில் ஊர்மிலாவும் ஊரிவிட்டார்.

 

கைப்பேசியிருந்த சிறு பையை பத்திரமாக ஒரு மேசையில் வைத்துவிட்டு வாசல் பெருக்க வைத்திருந்த தொடப்பத்தின் ஈர்க்குமாறு ஒன்றை உருவினார் ஊர்மிலா. நழுவ நினைத்த அமரனின் தலைமயிரை கொத்தாகப் பிடித்து இழுத்து கண்ணெது காலெது என்று தெரியாமல் சரமாரியாகத் தாக்கினார். வரிக்குதரையின் மேனியில் ஓடும் வரிகள் போல சின்னஞ்சிறு தடிப்புகள் சிவப்பாக அமரனின் மேனியில் ஓடின. வலி தாங்காமல் அழுத அமரனின் மூக்கிலிருந்து சளி வழிய அதை உருஞ்சிய படியே மூச்சிறைத்து தேம்பி தேம்பி அழுதான். 


சோபாவின் பின் ஒளிந்து கொண்ட உமையாளை ஊர்மிலா வார்த்தைகளாலே காயப்படுத்தினார். கை மேலே படவில்லை. இருவரையும் கோவம் தனியா குரலில் அழைத்து அக்கறையுடன் தலை துவட்ட முயன்ற போது அமரன் படுக்கையறைக்குச் சென்று நாற்காலியின் மீது கிடத்தப்பட்ட காய்ந்த துணிகளின் ஊடே சிக்கியிருந்த ஒரு துண்டை உருவி தன் தலையை தானே உலர்த்தினான். அடிவாங்கிய கோபத்தை விட தன்னை மட்டுமே அடித்த கோபம் அவனுக்கு வலியைத் தந்தது. அமைதியாக உடைமாற்றி தனக்குப் பிடித்த கேலிச் சித்திரத்தை தொலைக்காட்சியில் பார்த்தான். ஊர்மிலாவை சமாதானம் செய்ய தனது  மதிப்பீடுச் சான்றிதழைக் காண்பித்தாள் உமையாள். தன் மகளை நல்ல மதிப்பெண் பெற்றதற்காகப் பாராட்டி கடினமாக நடந்து கொண்டதற்கு மகளிடம் மன்னிப்பும் கேட்டார்.

 

'வெவ்வ வெவ்வ நான் தான் இளிச்சவாயன்' என்று மனதிற்குள் அமரன் குமுறினான். அமரனிடம் ஊர்மிலா அவனின் சான்றிதழை கேட்ட போது தலையை சொறிந்து மழுப்பி ஏடுகள் நனைத்து போயிற்று என்று தனது அறைக்குள் ஓடி மின்விசிறியினடியில்  ஏடுகளை தனித்தனியே அடுக்கி காய விட்டான். உமையாளும் அவன் ஏடுகளினருகே அவளின் நனைந்த ஏடுகளை அடுக்க முற்பட, அமரன் தடுத்தான். அவள் அம்மா என்று குரலிட்டதும் அக்காவிடம் இடையூறு செய்யாமல் மெத்தையின் மேல் அமர்ந்து கொண்டான். உமையாளின் ஏடுகள் அனைத்திலும் அவளுக்குப் பிடித்த கேலிச்சித்திரத்தின் லேபில்கள் இருந்தன. அமரனின் ஏடுகளில் பாதி லேபில் இல்லாமல் நிர்வாணமாகக் காட்சியளித்தன. பள்ளியின் தொடக்கத்தில் அப்பாவிடம் கேட்ட போது வாங்கி விடலாம் என்று சொன்னவர் மீண்டும் கேட்ட போது லேபிள் முக்கியமில்லை ஏடு தான் முக்கியம் என்று திட்டி துரத்தியடித்தார்.

 

இரவு வேலையை முடித்து அப்பாவான கமல் வீடு திரும்பினார். அவர் உமையாள் கேட்டிருந்த விலையுயர்ந்த பேனா வாங்கி வந்திருக்க மகன் கேட்ட உலக வரைபடத்தை மறந்துவிட்டார். நாளை வாங்கிக்கொள்ளலாம் என்று ஆறுதல் கூறிய போது அவரை இழுத்துக்கொண்டு போய் வாங்கி வந்து உமையாளிடம் காட்டி பீற்றிக்கொண்டான். அவளும் அவளுக்கு தான் பேனா என்றும் அமரனுக்கு வெறும் ஐந்து ரூபாய் மதிப்புள்ள வரைபடமே என்றும் எசப்பாடினாள். சீற்றத்தை அடக்கமுடியாதல் அக்காவின் சடயை இழுத்து முதுகில் ஓங்கிக் குத்தினான். அவளும் தனது முழங்கையால் தம்பியின் தாடயை பதம்பார்த்தாள்.  சண்டை வலுவெடுத்த நிலையில் கமல் மிரட்டித் தடுத்தார்.

 

அடுத்த நாள் காலையில் குளிக்க 'நான் முதல் நீ முதல்' என போட்டியிட்ட்னர். கமல் கத்தியால் பழங்களை அறிந்து பிள்ளைகளின் தின்பண்டப்பெட்டியில் போட்டுக்கொண்டிருந்தார். அடுப்பிலிருந்த வெண்ணீரை  அண்டாவில் ஊற்றிவிட்டு எங்களை கேள்வியுடன் நோக்கினார். உமையாள் உதட்டை பிதுக்கி கன்னத்தை ஊதி பாவமாக வைத்துக் கொண்டதால் அவளையே முதலில் குளிக்கச் சொன்னார்.

 

பின்பு  குளிக்கச் செல்ல துண்டை கட்டிய அமரன் கமலிடம் வெண்ணீரை ஊற்றச் சொல்ல, சமையலுக்கு கத்தியால் வெங்காயம் உரித்து உதவிக்கொண்டிருந்தமையால் அமரனையே எடுத்து ஊற்றிக் குளிக்கச் சொன்னார். ஊர்மிலா அவருடன் சேர்ந்து  ஆண்பிள்ளை எடுத்து ஊற்றக்கூடாதா என்று இகழந்த கோபத்தில் பாத்திரத்திலிருந்து அண்டாவினுள் ஆவிபறக்கும் வெண்ணீரை மாற்றியபோது அமரனின் கைகளில் ஆவி நீராய் மாறுவது போல் ஒரு வகைக் குளிர்ச்சையை ஆவி படர்ந்த இடங்களில் பரப்பியது. கோபத்தில் வேண்டுமென்றே பாத்திரத்தைக் கீழே போட்டான். ஊர்மிலாவின் திட்டுகளைக் குளியலறைக் கதவு தடுத்து மடக்கிவிட்டது. கையிலிருந்து நழுவிவிட்டது என்று பொய் சொல்லி சிரித்தவாறே குளிருக்கு இதமாக சூடான தண்ணீரில் குளியலை மகிழ்ச்சியோடு முடித்தான்.

 

அக்காவை மட்டும் சிறப்பாக கவனிக்கிறார்கள் என்ற கோபம் ஆறா வடுவாய் நீண்ட காலம் நிலைத்தது. அமரன் உமையாளுடன் பேசாமல் தட்டிக் கழித்தான். மாலை நேரங்களில் வேண்டுமென்றே தாமதித்து உமையாள் வீட்டை அடைந்த பின்பே அவன் வீட்டிற்கு வந்தடைத்தான். அந்தி சாயும் நேரங்களில் நன்றாக காய்ச்சி சுண்ட வைத்த பாலை ஊர்மிலா தருவது வழக்கம். அப்போது பெரிய குவளை தனக்கே வேண்டும் என அடம்பிடித்தான். உணவு குடும்பத்தாருடன் உண்ணாமல் தனியே உண்டு குடும்பம் உண்ணும் போது தூங்கப் போனான்.

 

உமையாள் ஒரு முறை பாதி வழியில் ஒரு இடத்தில் காத்திருந்து அமரனிடம் பேச முயன்றாள். ஆனால் அமரனோ செவி சாய்க்காமல் நகர்ந்தான். பின்பு அவளும் அவனை சமாதானம்  செய்ய முயலவில்லை. நம் கோபத்தை நம்மைத் தவிர வேறு யாரும் சரி செய்ய நாம் அனுமதிப்பதில்லை. அப்படி செய்வதை நம் மனம் ஏற்க மறுக்கிறது. வரட்டுப்பிடிவாதத்தாலேயே பல உறவுகள் முறிந்து போகின்றன.  தந்தை தாய் இருவரும் பணிச்சோர்வில் இரவு நேரங்களில் எதுவும் கேட்டுக்கொள்வதில்லை. தமக்கையின் மீது தம்பி நேசமும் பாசமும் அற்று இருப்பதை கவனிக்கவுமில்லை. 

 

ஒரு நாள் இரவில் உமையாள் படித்துக்கொண்டிருந்தாள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கியிருந்தது. அமரன் சாப்பிட தட்டை எடுத்துத் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்து அம்மாவைக் கூவி அழைத்தான். ஊர்மிலா செல்லமாக மகனிடம் ஓர் ஐந்து நிமிடம் அக்காவும் வந்துவிடுவாள் என்றதும் தன் தட்டை தூக்கிச் சுவரில் அடித்துவிட்டு வெளியேறினான். தெருவின் முக்கு வரை சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு வருகையில் அம்மாவும் உமையாளும் இரவு உணவு உண்டு கொண்டிருந்தனர். ஊர்மிலா அடிக்க அருகிலிருந்த தோசைக்கரண்டியை எடுத்தார். ஆனால் கமல் ஊர்மிலாவைத் தடுத்து அமரனை எதுவும் சொல்லாமல் அன்பாக அவனை சாப்பிட அழைத்தார். அவன் கேட்காமல் உமையாளினருகில் இருந்த தொலைக்காட்சியின் இயக்கியை எடுத்து கேலிச்சித்திரம் பார்த்தான். ஊர்மிலா எப்படியோ செல்லம் கொஞ்சி ஊட்டி ஊட்டி இரு தோசைகளை அமரனைச் சாப்பிடச் செய்து விட்டார்.


அன்று தூங்கும்போது அமரனின் போர்வையை உமையாள் திருடிச் சென்று மெத்தைவிரிப்பாகப் பயன்படுத்தி இரவைக் கழித்தாள். கொசுக்கடியிலும் புழுக்கத்திலும் அமரன் துயில்கொள்ள முடியாமல் படாதபாடு பட்டான். அடுத்த நாள் காலையில் கண்களில் கருவளையங்களுடனும் நெஞ்சில் தூங்கா இன்னல்களுடனும் பள்ளிக்குச் செல்லத் தயாரானான். அப்பொழுது ஒரு திட்டம் வைத்திருந்தான். வேண்டுமென்றே அக்காவைச் சண்டைக்கு இழுத்தான். சண்டையில் அமரனின் கோபம் வரம்பை மீறி, அது வெறியாய் மாறி இரத்தக்கொதிப்பில் தன்னையே இழந்து சன்னலின் வளிம்பில் உமையாளுக்காகக் கமல் வாங்கி வந்த விலையுயர்ந்த பேனா மையூற்றி வைக்கப்பட்டிருந்ததை கவனித்தான். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அதை அமரன் தன் கைகளில் எடுத்து பெருவிரலால் மூடியை விடுத்து உமையாளின் வலது விழியில் பாய்ச்சினான். மையும் குருதியும் அவலமிக்க ஓலமும் உமையாளிடமிருந்து வெளிவந்தது. அமரன் ஒரு கனம் அரண்டான். கையின் ரேகை மடிப்புகளில் ஒரு வகையான திடத்திரவம் படர்ந்து காய்ந்து பிசுபிசுக்க, காற்றில் இரும்பு வாசம் பரவியது.  ஐயோ என்று உமையாள் கதர, பேனா தன் இடத்தை அடைந்தது போல் செங்குத்தாக உமையாளின் கண்ணில் நின்றது. கண்ணின் வெண்மை வெளியே பொங்கியிருந்தது. கமல் உமையாளை அழுது கொண்டே மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல ஏதோ ஒரு கை அமரனை இழுத்து முந்தைய இரவுக்கே கொண்டு வந்தது. 


அவன் முன் உமையாள் பதற்றமான குரலில் என்னானது என்று கேட்க அக்காவின் கண்களையே வெறிக்கப் பார்த்தான். உடல் முழுதும் வேர்த்து விரைத்து கண்கள் பயத்தில் விரிந்திருந்தன. இதய நடுக்கம் உடல் முழுமைக்கும் பயத்தை அழுத்திப் பாய்ச்சி காய்ச்சலை ஏற்றியது. அழுகை அடக்க அடக்க குமுறிக்கொண்டு வர உமையாளை இறுகப்பற்றி அழுதான். 


அன்று அனைவருக்கும் முன்பே அமரன் கோபத்தின் தாலாட்டில் நித்திரையில் ஆழ்ந்துவிட்டான் என்று கமல் அமரனை ஆசுவாசப்படுத்த முயன்றும் அமரனின் அச்சம் அகலவில்லை. ஊர்மிலா அமரனுக்கு நடந்ததெல்லாம் கனவு என்று தெளிவுபடுத்தியும் அதிர்ச்சியின் தாக்கம் நெஞ்சுக்குழியை உலுக்கியது. அன்றிரவு உமையாள் அவனின் பதற்றமான மூச்சுக் காற்று சீராகும் வரை கவனித்தாள். மாத்திரை விழுங்கிய பின்பே அமரனின் உடல்வெப்பம் இறங்கியது. மூவருமே அமரனின் சீரான நிலையைக்கண்ட பின்பே நிதானமடைந்தனர்.


அமரன் ஏற்படுத்திய பரபரப்பில் யாரும் தூங்கவில்லை. பால்நிலாவை கரிய மேகங்கள் மறைத்து மழை தூவ ஒரு மனோரஞ்சிதமான அமைதி நல்லிரவில் ஊடுருவியது. மேகங்களால் வீசப்பட்ட மின்சாட்டையானது வானை இரண்டாகக் கிழித்து மறைந்தது. தாயும் தந்தையும் உமையாளும் மின்னல் கோடுகளை ரசிக்க, அமரன் கண்களை மூடிக் காத்திருந்து மின்னலுக்குப் பின் ஒலித்த இடியின் முழக்கத்தில் ஓர் இனிமையுணர்ந்தான். அந்த இடியின் ஒலி மின்னல் முதலில் ஒளிர்வது குறித்து போட்டியிடுவது இல்லை என்ற ஞாணத்தை அமரனின் உள்ளத்தில் பாய்ச்சியிருந்தது. மேலும் அந்த கோரமான கனவு அவனின் முட்டாள் தனமான கோபத்தின் விளைவையும் ஆழ்மனதில் பதிவுபடுத்தியிருந்தது.  அதே போல் அமரனும் இனிமேல் உமையாளுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமையை கண்டுகொள்ளவோ போட்டிபோடவோ வேண்டாம் என்று வரண்ட உதட்டில் ஒரு குளிர்ந்த புண்ணகையை உதிர்த்து, தன் பிடிவாதக் கடிவாளத்தைக் கழற்றி மனநிம்மதியுடன் தூங்கிப்போனான்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்