மெய்ஞ்ஞான மனையாள்
அதிகாலை துயில் கலைந்த மெய்ஞ்ஞானம்
என் மனதினில் எனை ஆளும் பெண்தாரம்
மென்மையும் தாய்மையும் கலந்த தெய்வீகம்
அவள் பிறக்க தூய்மையானது பூலோகம்
எனை மணக்க மேன்மையானது என் வாழ்வும்
வேலையின் சுமையைத் தாங்கும் சுபாவம்
பார்வைகள் அனையாக் காதலின் எரிதாபம்
வார்த்தைகள் ஊடல் கடத்தும் நாண பாணம்
அவள் பரிமாறும் கூடல் ஒரு ராகம்
பெண்மையின் வாசனை காற்றில் உலாவும்
புலர் காலை அழகு கூட்டும் புது மோகம்
பூமகள் சேலை பூ போல் தள்ளாடும்
சேயிழைப் பார்வை ஈர்க்கும் மின் காந்தம்
சூடிய மல்லிகை மொட்டுகள் கவிபாடும்
இளையவளின் மெலிந்த கலாபம்
வளை நெளி இடையை அழகாக்கும்
வேர்வைகள் முகத்தினில் உருண்டோடும்
நானவள் முந்தானையில் துடைத்தெடுக்க தேகம் சிவப்பாகும்
ஒவ்வெரு நாளும் புதிதாகும்
அவள் பாசத்தில் கல்லும் உயிராகும்
ஆகச்சிறந்த நிறையன்பில் உள்ளம் விரிவாகும்
அவளருகில் அச்சங்கள் வெளியேறும்
இன்னல்களில் என்தலை சாய்ப்பது பொன்மகள் மடியாகும்
அவள் அன்பிற்கு இல்லை இணையேதும்.
என் மனையாள் உயர் சிறப்பில்
அவள் துணையில் நான் செழித்தேன்
உறைந்த மன வெளியில்
வெளிச்சம் பரப்பிய வஞ்சியின் வாஞ்சையை
நினைத்து நினைத்து உயிர் இனித்தேன்..


கருத்துகள்
கருத்துரையிடுக