உண்டிகோல்

 



உண்டிகோல்

 

மழைக்காலத்தில் செழித்த சோளம், நுனியில் மஞ்சளும் அடியில் இளம்பச்சையுமாக வயலில் அசைய, அதிகாலை வானின் செந்நிற ஒளிக்க்கதிர்கள் வரப்புகளினிடையே ஓடிய தண்ணீரில் எதிரொலித்து மிளிரந்தன. தென்னங்கீற்றுகளில் தூக்கணாங்குருவிகள் கீச்சிட்டுக் கீச்சிட்டு உற்சாகமாக இசைத்தன. ஞாயிற்றுக்கிழமையை விளையாடிக் கழிக்க வந்த சிறுவர்கள் சோளம் விதைத்த அமைதியான பசுமைப் பெருவெளியில் சிரிப்பலைகள் பரப்பி, கணுக்காலளவுத் தண்ணீரில் சலக்சலக்  என்று அடிகள் எடுத்துவைத்து ஈரம் பாய்ந்து குழைந்த செம்மண்ணில் காலடித்தடங்கள் பதித்து  நடந்து சென்றனர். 

 

இது என்னோடது. நான் தான் மொதல்ல’ என்றான் அன்பு.

 

அடுத்து நானு’ என்று அனைவரையும் முந்தியடித்தான் இன்பா.

 

ஐவரும் நான் நீ எனச் சண்டையிட்டுத் தகராறு செய்து சிலநிமிடப் பேச்சுவார்த்தைக்குப் பின் அன்பு, இன்பா, கார்த்தி, குமார், மீனா என்ற வரிசை முடிவானது. மீனாவைத் தவிர அனைவராலும் அந்த வரிசை ஏற்கப்பட்டது.

 

உனக்குத் தர்ரதே பெருசு மீனா’ என்று அவளை மேலும் பேசாதவாறு அடக்கினான் அன்பு.

 

ஐவரும் நெடுமா என்ற கிராமத்தில் வசித்தனர். அங்கிருந்து பத்துகிலோமீட்டர் தொலைவிலுள்ள தனியார்ப்பள்ளியில் முதல் வகுப்பிலிருந்தே ஒன்றாகப் படித்தனர். வகுப்புத்தேரச்சிப் பெற்று அடுத்த வகுப்பிற்கு முன்னேறும் போதே பெற்றோர்களிடம் பள்ளியில் பேசச் சொல்லி ஒரே வகுப்பில் சேர்ந்துவிடுவர். பெற்றோர்கள் மறுத்தால் அடம்பிடித்துக் காரியம் சாதிப்பர். அவ்வாறு பத்தாண்டு காலம் ஒன்றாகப் படித்து நெருங்கிய நண்பர்களாகப் பள்ளியிலும் கிராமத்திலும் ஐந்துபேர்க் கொண்ட குழுவாகச் சுற்றித்திரிந்தனர். மேலும் ஒரே கிராமம் என்பதால் ஐவரும் ஒரே பள்ளி வாகனத்தில் தான் செல்வர். எவ்வளவு பிளவு நட்பில் ஏற்பட்டாலும் எறும்புக்கூட்டம் இனிப்பைத் தேடி வருவதைப் போல் மீண்டும் ஒன்றாகிவிடுவர். 

 

அன்று அவர்கள் கையில் ஒரு உண்டிகோலிருந்தது. அதை யார் முதலில் பயன்படுத்துவது என்றே ஐவரும் சண்டையிட்டனர். செல்லச் சண்டை என்றாலும், சண்டையால் சினம் பெருகும். சினத்திற்கே உரிய குணம்: எப்போது தன்னையிழக்க வைத்து உறவை அழிக்கும் என்பது யாருமறியாதது.  ஆகவே அன்பு கவனமாக இருந்தான். 

 

ஒருநாள் அவனது தந்தையுடன் பள்ளிக்குத் தேவையான ஏடுகள் வாங்க  புதுமைப் பொருளகத்திற்குச் சென்ற போது கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறக் கைப்பிடியால் செய்யப்பட்ட உண்டிகோல் அவனின் கண்களில் சிக்கிவிட்டது. அதை அவன் அடம்பிடித்து தந்தையின் மேல் சோப்பில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக்கொடுத்து உண்டிகோலை வாங்கிய பின்பே கடையைவிட்டு வெளியேறினான். ஆனந்த அலை அவன் முகத்தில் பரவியது.

 

அன்பிற்கு அவனது தாத்தா ஒரு முறை விடுமுறைக்காக ஊருக்குச் சென்றபோது உண்டிகோலைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். மூன்று நான்கு வருடங்கள் இருக்கும். இருந்தும் தாத்தாவின் நேசத்தை அந்த அதிகாலை சூர்யோதயத்தில் படரும் இளவெப்பத்தைப் போல் அவனால் அப்போதும் உணர முடிந்தது. குழந்தைப் பருவ நினைவுகளுக்கு ஆற்றல் அதிகம். அவை எளிதில் நம்மை விட்டுப் பிரிய மறுக்கிறது. 

 

'சீக்ரம் டா! இல்லன கொடு நான் விட்ரேன்' என்று நினைவில் சிலிர்த்துக் கொண்டிருந்த அன்பிடமிருந்து உண்டிகோலை வெடுக்கென்று பிடுங்கினாள் மீனா. அன்பு கோபித்தான் ஆனால் உண்டிகோலை மீனாவிடமிருந்து திரும்பப் பிடுங்கவில்லை. கொடுக்கச் சொல்லி வற்புறுத்தவுமில்லை. 

 

உண்டிகேலைப் பயன்படுத்தக் கல் வேண்டுமே! அதில் சிரமம் ஏற்பட்டது. உழுது, வரப்புக் கட்டித் தண்ணீர்ப் பாயும் மண்ணில் பொடிக்கற்களைத் தவிர ஏவுவதற்கு ஏதுவான கற்கள் சிக்கவில்லை. 

 

தாழ்வானப் பகுதி மேடாகி ஒரு கிணற்றிற்குச் சென்றது. அங்கிருந்த குழாயின் வழியாகவே அழுகில்லாத தூய்மையான நீர் பாய்ந்து வந்தது. அக்கிணற்றை நோக்கி மீனா ஓட, பின்னே நால்வரும் அவளை பின்தொடர்ந்தனர்.

 

குழாயை சுற்றியும் கூழாங்கற்கள் நீர்க்குமிழிகள் போல் வட்ட வட்டமாகப் பல நிறங்களில் கிடந்தன. அதில் ஒன்றை எடுத்து உண்டிகோலின் கவையில்  ரப்பர் கட்டப்பட்ட இடைப் பகுதியில் கல்லைப் பதித்து இழுத்து மறு கையால் கவையை இருகப்பற்றி ஒரு கண்ணைக் குறுக்கி மறு கண்னால் தொலைவிலிருந்த ஒரு தென்னை மரத்தைக் குறி வைத்தாள் மீனா. ரப்பரைப் பிடித்திருந்த கையை விட்டவுடன் விர்ர் என்று காற்றைக் கிழித்துக்கொண்டு விரைந்த கல் டப் என்று தென்னை மரத்தில் மோதி எதிரொலியெழுப்பி மறைந்தது. இன்பாவும், குமாரும் ஓடிப்போய் தென்னையை பார்த்த போது அதன் தண்டில் ஒரு பகுதியிலிருந்த சிறு பள்ளம் கல்லடித்துச் சிதறிய பகுதி தான் என்று உணர்த்தியது.

 

மீனாவை அனைவரும் வியந்து பார்த்தனர். அவளுக்கு மனதினுள் ஓர் உற்சாகம் கலந்த பெருமை பிறந்தது. இன்பத்தில் உலாவிய அவளிடமிருந்து உண்டிகோலைப் பறித்து அன்பு ஒரு கல்லை விட்டெறிந்தான். மீனா அடித்த தென்னையை  தாண்டியிருந்த தன்னந்தனி வாழைமரத்தை பதம் பார்த்தது அக்கல்.

 

இன்பா, கார்த்தி மற்றும் குமார் வாங்கி முயற்சித்தனர். பரீட்சியப்படாத வித்தை என்பதால் கல்லால் அவர்கள் நினைத்த தூரத்தை எட்ட முடியவில்லை. குமார் விட்ட கல் பொத்தென்று அரையடி தள்ளி விழுந்தது. 

 

'போகப் போக பழகிடும்' என்று குமார்க்கு ஆறுதல் சொன்னாள் மீனா. குமார் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

 

'என்ன?' என்று வினவினாள் மீனா.

 

'நீலாம் ஆறுதல் சொல்றியே அதுதான் தாங்க முடில' என்று குமார் சொல்ல அன்பு சிரித்தான். அவனைத் தொடர்ந்து சிரிப்பு இன்பாவுக்கும் கார்த்திக்கும் பரவ, மீனாவின் முகம் சினத்துச்சிவந்தது. 

 

உண்டிகோலைத் தர மறுத்த குமாரிடம் பேசி அதை வாங்கிய மீனா தனது முழு சினத்தையும் கல்லில் ஒன்று திரட்டி நொடிப்பொழுதில் விட்டெறிந்தாள். உண்டிகோலிலிருந்து பாய்ந்த கல் காலைப்பொழுதைக் கொக்கரித்து மகிழ்ந்து, நிலத்தைக் கீரி மண்புழுக் கொத்திய கோழியின் தலையை பதம் பார்த்தது. இரத்தம் பீரிடக் கோழி தனது  செந்தூரல்களில் நனைந்தவாறே உயிர் நீத்தது. தொலைவில் நின்ற அவர்கள் ஐவருக்கும் கோழி தன் ரத்தத்தையே பூக்களாகப் பாவித்து இறுதிச் சடங்கு செய்வது போல தோன்றிற்று.

 

'போச்சுடா!' என்றான் அன்பு.

 

'டேய் செத்தோம்டா! மீனா அது ரங்கராஜன் கோழி டீ!'  என்று கண்களில் பயம் பரவ அழுத்தமான குரலில் குழறினான் இன்பா.

 

ரங்கராஜன் ஊரின் தலைக்கட்டு. அறுபத்தைந்து வயதிருக்கும். கோவில் திருவிழா முன்னெடுப்பு, ஊரில் உருவாகும் சிறு பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது, உள்ளூரில் முக்கிய முடிவெடுப்பு என்று பல சிறப்புகள் கொண்டவர். நெடுமாவில் உள்ளவர்க்ளும் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களும் அவர் மேல் மரியாதையும் பயமும் கொண்டிருந்தனர். அவர் அந்த மரியாதைக்கும் பயத்திற்கும் ஏற்ப செல்வாக்கும் செல்வமும், அறிவும் ஆளுமையும் மிக்கவர்.

 

கோழியின் நிறம் கருப்பு. அது எதிர்பாராமல் இறந்தது என்ற இரண்டையும் தொலைவிலிருந்து உறுதி செய்தனர்.

 

'டேய்!' என்ற சத்தம் வர அனைவரும் ஒரு நொடி அதிர்ந்தனர். உடல்கள் மருண்டு இறுகின. எச்சிலைக் கூட முழுங்க முடியாமல் திகைத்தனர்.

 

'குமாரு சாப்பிட வாடா' என்று அவனது தாய் வீட்டின் சாளரம் வழியாக விளித்தார்.

 

'வரேன்மா அப்ரமா' என்று குமார் அன்னையின் அழைப்பைத் தட்டிக்கழித்தான். 

 

ஐவரும் நிம்மதிப் பெருமூச்சிட்டு பயத்திலிருந்து மீண்டனர். கிணற்றின் அருகே பாசம் படிந்த  சிறு தொட்டியின் விளிம்பில் அமர்ந்து என்ன செய்யலாம் என்று உரையாடத் தொடங்கினர்.

 

'பேசாம வீட்டுக்குப் ஓடீரலாம்' என்று மீனா சொல்ல அவளின் கைகள் மத்தளக்காரர் போல் காற்றை வெறுமென வாசித்தவாறு நடுங்கின.

 

'வேனா நம்ம தானு கண்டுபிடிச்சுடுவான் ரங்கராஜன்' என்று அன்பு சொன்னான்.

 

'எப்டிடா சொல்ற' என்று சந்தேகங்கலந்த ஆச்சிரியப் பார்வையோடு வினவினான் இன்பா.

 

'மீனா கொன்ன கோழிக்கு ஒரு ஓ போடுங்க' என்று கிணற்றுக்குள் கத்திச்சிரித்தான் கார்த்தி. இன்பாவும் என்று கூவ, ஆழ்கிணறும் என்று எதிரொலித்து ஒத்தூதியது.

 

'சும்மா இருங்க டா! நான் காலைல அவன் ஊட்டு வழியா வரும்போதே ரங்கராஜன் ப்ரஷ் பன்னிட்டு வெளிய நின்னான் அப்ப கைல உண்டி கோலப் பாத்துட்டான்' என்று அன்பு மேலும் பயம் சேர்த்தான்.

 

'பேசாம கோழிய கிணத்துல வீசிரலாம்' என்று குமார் சொன்னான். அவனின் யோசனையை அனைவரும் ஆமோதித்தனர். 

 

பின்பு சிறுது நேரம் கலந்து பேசினர். கோழியைக் கொன்ற மீனா தான் அதைத் தூக்கிக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தனர். அன்பு அவளுடன் உடன் வர முன்வந்தான். 

 

பேசியவாறே ஒரு பழைய அழுக்குச் சாக்கை இன்பா எடுத்துவர வீட்டிற்குச சென்றான். அம்மாவிடம் கேட்டால்  பல கேள்விகள் வரும் என்று தெரிந்த அவன் நேரடியாக பழைய பெருள்களின் குவியல் கிடங்கிற்குள் நுழைந்து ஒரு சாக்கை உருவி வெளியில் வந்நவனை அம்மா பார்த்துவிட்டார்.

 

'இது எதுக்கு டா?'

 

'சும்மா தாம்மா' என்று மழுப்பி திருதிருவென கருநிற விழிகளை உருட்டினான். 

 

'இப்ப எதுக்குனு சொல்லல அப்பா கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டினார் இன்பாவின் தாய்.

 

'மா கீழ உக்காந்து வெளாட்றோம் அதான் அழுக்கு புழுதி துணில படாம இருக்க' என்று சொல்லியவாறே தரையிலுராயந்த சாக்கை மடித்து நடந்தான். தாயின் மறு மொழியையோ மறுப்பு மொழியையோ கேளாமல் ஓடி வந்துவிட்டான்.

 

கிணத்து மேட்டில் அன்பும் மீனாவும் தயாராக இருந்தனர். இன்பாவின் கையிலிருந்த சாக்கு கோழியின் எச்சங்களும் அழுக்கும் எலிப்புழுக்கைகளும் படிந்து நாற்றம் வீசியது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அன்பு வாங்கிக்கொண்டு மீனாவுடன் ரங்கராஜின் கட்டுத்தரையை நோக்கி நகர்ந்தான். நடக்க நடக்க கற்களோடு காலணி மோதி சரக் சரக்  என எழும் சத்தம் கூட பயத்தை மூட்டியது. 

கட்டுத்தரையை ஒட்டியே வீடு என்பதால் கவனமாக செயல்பட வேண்டும் என்பது அவசியமானது. கவனத்தின் மூலம் அச்சவுணர்வு அதிகமானதே திவிர குறையவில்லை.

 

கட்டுத்தரையை நெருங்கியதும் ரங்கராஜனின் வீட்டினுள்ள சாளரத்தின் வழயே தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒலி கசிந்தது. கட்டுத்தரையை அடைந்தபோது அந்த ஒலி நன்றாகவும் தெளிவாகவும் இருவரின் செவிகளில் கேட்டது. அதனுடன் மீனாவின் இதயத்துடிப்பும் லப்டப் லப்டப் என்று அடித்தது. அன்பு நிதானமாகவே இருந்தான்.

 

இலையிடுக்குகளின் வழியாக சூரியவொளி தரையை ஆங்காங்கே புள்ளியிட்டது. கோழியைச் சுற்றிச் சிதறிய ரத்தம் இருகி, அதன் மேல் ஈக்கள் மொய்ச்சின. கோழி வாய்ப் பிழந்து நாதியின்றிக் கிடந்தது. அன்பு தன் நுனிவிரல்களால் சாக்கை விரிக்க எங்கிருந்தோ வந்த குக்கரின் விசிலொலியின் சத்தத்தில் இருவரும் துள்ளினர். மீனா கீழ் உதட்டைக் கடித்து கவனத்தைக் குவித்துக் கோழியை பட்டும் படாமலும் மிகக்கவனமாக எடுத்துச் சாக்கில் வைக்க தூக்கியபோது காகங்களுக்குச் சோறு போட வந்த ரங்கராஜனின் மருமகள் கீதா மதில் சுவர் வழியாகப் பார்த்து தொண்டை கிழிய கூச்சலிட்டாள்.

 

'எங்க ஊட்டு கோழிய எந்த நாய் டா திருட்றது'

 

இருவரும் அச்சத்தில் அசைவில்லாமல் பதுமைகள் போல் நின்றனர். கிணற்று மேட்டிலிருந்து பார்த்த கார்த்தி பதற்றமடைந்தான். அவனின் கை கால்கள் கிடுகிடுவென கழன்றுவிழுவது போல் நடுங்கின. 

 

'டேய் சண்டாளி கீதா பாத்துட்டா டா. ரங்கராஜனக் கூப்டுவா. வாங்கட நம்ம ஓடீர்லாம்' என்றான் குமார். 

 

'சரி வாங்க அங்க போலாம்' என்று இன்பா இருவரின் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

 

இன்பா, குமார், கார்த்தி சென்றபோது ரங்கராஜனும் கீதாவும் அன்பையும் மீனாவையும் வார்த்தைகளால் வாட்டி எடுத்தனர்.

 

'ஓ! கூட்டாளிகளும் வந்தாச்சா' என்று சீறினார் ரங்கராஜன். மீனாவும் அன்பும் தலை குணிந்து பாவமாக நிற்க மீனாவின் கண்களில் கண்ணீர் தேங்கியது.

 

நடந்ததை விளக்க இன்பா எவ்வளவு முயன்றும் முடியவில்லை. கீதா அவன் வார்த்தைகளுக்கு மறுவார்த்தை பேசிப் பேசி மடக்கினாள். அன்பு இன்பாவைப் பார்த்து பயனில்லை என்று சைகை காமிக்க இன்பா அமைதியானான். 

 

'உங்க அப்பங்கள வரச் சொல்றேன்' என்று கைப்பேசியை எடுத்து ரங்கராஜன் அன்பின் தந்தையை அழைத்தார்.

 

'மாணிக்கம் இங்க ஏன் வீட்டுக்கு வாங்க. உங்க பயன் பன்னீருக்க விஷயத்த பாருங்க .... அப்டியே இந்த மீனாவோட அப்பா வசந்தன  கூட்டீட்டு வாங்க கையோட' என்று இறுகிய குரலில் பேசினார்.

 

மாணிக்கமும் வசந்தனும் வந்தனர். இருவரின் முகத்திலிருந்த களை தம்தம் பிள்ளைகளைப் பாரத்த போது வாடிப் போயிற்று.

 

'வசந்தன் உங்க பொண்ணும் இந்த அன்பும் மிச்ச மூனு சிறுசகளோட சேர்ந்து என் கோழிய திருடப் பாத்துருக்காங்க... கோழிய கல்லுட்டு கொன்னுறுக்காங்க' என்று ரங்கராஜன் தன் வருத்தத்தை மாணிக்கத்தையும் வசந்தனையும் பார்த்து தெரிவித்தார்.

 

'மாமா இவங்ககிட்ட என்ன பேச்சு ஒரு நாளு தென்னமரத்துல கட்டி சாட்லை பின்னி எடுத்தா இனி கோழி திருட்ற நெனப்பே இந்த தொண்டு சுத்திகளுக்கு வராது' என்று கீதா வசை பாடினாள்.

 

'ஏங்க நாங்க ஒன்னும் திருடல... அது திருடர அளவுக்கு பெரிய கோழியில்ல அதுவே ஒரு சீக்கோழி' என்று முழங்கினான் இன்பா.

 

'அந்த சீக்கோழியக் கூட நீங்க உட்டு வைக்கலயே... ஆனா உத்தமனாட்ட பேசற' என்று கடுகடுத்தாள் கீதா.

 

'காலைலயே உன்ன அந்த கவையோட பார்த்த அப்பவே காட்டுக்குள்ள போகாதடானு சொல்லிருக்கோனும் ஏந்தப்பு தான்' என்று சினம் பொங்கப் பேசினாலும் வார்த்தைகளில் கீதாவைப் போலில்லாமால் தெளிவும் ஞாயமான கோபம் ரங்கராஜனிடம் இருந்தது.

 

'ஏன் பாப்பா?' என்று வசந்தன் மீனாவைப் பார்த்துக் கேட்டார்.

 

'அய்யடா இவ பாப்பவா' என்று வாயைக் கோனலாக்கி கீதா சிடுசிடுத்தாள்.

 

அன்பைப் பளீர் எனக் கன்னத்தில் அறைந்தார் மாணிக்கம். அவன் கன்னம் அருகில் மலர்ந்திருந்த செம்பருத்திப் பூக்கிணமாகச் சிவந்தது. பூவில் தேண் வடிவது போல் அன்பின் கண்கள் நீர் வடித்தன.

 

'மன்னிச்சுக்கோங்க ரங்கராஜண்ணா கோழிக்கு காசு வேன தந்தரேன்' என்று மாணிக்கம் கேட்டார். 

 

'அதெல்லாம் முடியாதுங்க மாணிக்கம். உங்க பயங்கரதுனால நிக்க வெச்சேன் வெளியூர்க் காரனை இருந்தா நடக்கரதே வேற' என்று கடுமையாகக் கூறினார்.

 

'வயசுக்கு வந்த பொட்ட புள்ளைக்கு பசங்களோட என்ன வேல?' என்று கீதா கொழுத்திப் போட்டாள்.

 

'தேவையில்லாத பேசதீங்க...  கோழிக்கு இதுக்கு என்ன சம்பந்தம்' என்றான் குமார்.

தோழர்கள் நால்வரும்  குமாரா பேசியது என்று பிரமித்தனர். தனது அமைதியான நிலையிலிருந்து பொங்கிய குமாரின் குரலில் ஆவேசம் இருந்தது.

 

'எங்க வீட்டு பொண்ணா நெனச்சு சொன்ன மா. பொண்ணுக்கு பொண்ணு கொடுக்கற அட்வைஸ் இவனுகளோட சுத்தரத விட்டுட்டு படிக்கற வேலையப் பாரு' என்று குமாரின் வார்த்தைகளைச் செவியில் வாங்காதவாறு தனது சேலையின் முந்தானையை இடுப்பில் செருகியபடி பேசினாள்.

 

'மீனா இனி நீ இவங்க கோட சேராத. இவிங்க கூட சேர்ந்த இப்டி தான் நிக்கனும்' என்று அறிவுரை வழங்கினார் வசந்தன். 

 

'ஆமா கல்லவுட்டெறிஞ்சதே உம் மக தான் இதுல ஏம் பயன் கூட சேரக்கூடாதான். நான் தா அத ஏன் பயன் கிட்ட சொல்லனும்' என்று  வாதிட்டரர் மாணிக்கம்.

 

'ஆனா இருந்தாலும் பொண்ணு வீட்ல தான வளர்ப்பு சரியில்லனு சொல்லுவாங்க' என்றாள் கீதா. கீதாவுக்கு அச்சண்டை நல்ல சுவாரசியமான பொழுதுபோக்காக அமைந்தது. அவளுக்குக் கோழியின்மேல் அக்கறை ஒன்றுமில்லை. 

 

மானம் பறந்தோட, தந்தையைத் தெருக்கிழுத்த துக்கமும், நட்புப் பிளவுண்டு விடுமோ என்ற விடையில்லா அச்சமும் அன்பையும் மீனாவையும் மனதளவில் நோகடிக்க, கீதா அதன் வீரியத்தை அதிகப்படுத்த அத்தனை செயல்களையும் செய்தாள்.

 

'கீதா நீ உள்ள போமா' என்று ரங்கராஜன் அழுத்தமாகச் சொன்னார்.

'இல்ல மாமா நா என்ன சொல்றனா...' என்று கீதா இழுத்தாள். 

 

'உள்ள போமா' என்று காட்டமாகச் சொன்னார் ரங்கராஜன். இன்பா மென்னகை புரிந்தான். ரங்காராஜன் அவன் பக்கம் பார்த்தபோது முகத்தைப் பாவமாக மாற்றினான். கீதா செருகிய முந்தானைய கோபத்தோடு உதறி முனுமுனுத்து உள்ளே சென்றாள்.

 

'உங்க சண்டைய உடுங்க... ஏன் கோழிக்கு என்ன பதில்?' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த மாணிகத்தையும் வசந்தனையும் பார்த்துக் கேட்டார் ரங்கராஜன். 

 

'காசு வேண்டானு சொல்லிட்டீங்க நீங்களே என்ன வேணும்னு கேளுங்க?' என்று மாணிக்கம் சொன்னார்.

 

'இவங்களுக்கு தண்டன கொடுக்காமா அணுப்ப மாட்டேன்' என்றார் ரங்கராஜன். 

 

'அதான் இந்த அஞ்சு பேர்த்தையும் பிரிச்சடலாம். அது தான அண்ணா' என்றார் வசந்தன். 

 

'இல்ல. அஞ்சு பேருஞ் சேந்து தான் என் கோழிய கொன்னாங்க அதனால அஞ்சு பேரு சேந்து தான் அது போட்ட குஞ்சுகள வளர்த்து ஒன்னு கூட கம்மியாகம கொடுக்கனும்' என்றார்.

 

ஐவரின் உதட்டின் ஓரத்திலும் சிரிப்புப் படரும் அச்சு வந்து மறைந்தது. மனதிற்குள் நிம்மதி குடிகொண்டது. நட்பு பிரியவில்லை என்ற ஆத்மநிம்மதி.

 

மூங்கில் கூடைக்குள் குவிக் குவிக் குவிக் என இரைச்சலிட்டுத் தாய் கொண்டுவரும் உணவை எதிர்பார்த்து குறுக்கும் நெடுக்குமாக ஓடிய ஆறு கோழிக்குஞ்சுகளை காண்பித்தார் ரங்கராஜன். காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் வந்து குஞ்சுகளுக்கு தீவனம் போட வேண்டுமென்று உத்தரவிட்டார்

 

'இவங்கள ஒன்னா விடாதீங்க' என்று வசந்தன் கோபித்தார்

 

'ப்ளீஸ் பா. இனி இப்டி பன்னமாட்டோம்' என்று மீனா உலகின் அனைத்துச் சோகத்தையும் தன் முகத்தில் கொண்டு வந்த குரலுக்குப் பாவ தொனி ஏற்றிக் கெஞ்சினாள்.

 

'ப்லீஸ் அங்கிள்' என்று அன்பு, இன்பா, கார்த்தி மற்றும் குமார் பாட, வசந்தன் இணங்கி வந்து ஐவரும் ஒன்றாகவே சுற்றித்திரிய அரை மனதுடன் சமதித்தார். 

 

மற்றொரு கைப்பேசியில் வந்த அழைப்பை ஓடி வந்து கீதா ரங்கராஜனிடம் கொடுத்தாள். அவசரத்தில் காலணிகள் போடவில்லை. அவற்றை வீட்டின் முன் விட்டிருந்தாள். அதையொரு நாய் கவ்விக் கொண்டு ஓட, 'ஏய்! சூ! ஏய்! சூ!' என்று காலணிகளை மீட்க நாயின் பின் ஓடினாள்.

 

ஐவரும் வயிறு குழுங்க சிரித்து மீண்டும் விளையாடச் சென்றனர்.

 

'ஹம் ஹம்' என்று ரங்கராஜன் இருமுவது போல் சாடை பேசினார்.

 

'சாய்ங்காலம் வந்துறுவோம்' என்று ஒருசேர ஐவரும் சொல்லிச் சிரிப்பை உதிர்த்து விளையாடச் சென்றாலும் இனி கவனம் தேவை என தங்கள் மனதிற்குள் பதியவைத்தனர்.

 

ரங்கராஜன் இறந்த கோழியை கசாப்புக் கடையில் கொடுத்து லாபமும் பார்த்தார்.

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்