பூவையின் இலக்கியம்



மாதுளை மணி போல் குழி விழும் கழுத்தில்

தேனிதழ் பதித்து எழுவேனோ!

மோதிரம் போலவள் கைகளின்

இடுக்கில்

விரல் சேர்த்துக் கொள்வேனோ!

வெண்மை மிதக்கும் விழிகள் வீசும் 

பார்வையில் 

மகரம் நுகர்ந்த வண்டாய் மயங்கேனோ!

மேவிய விரல்கள் ஏவிய

தொடுதல்

மேனியில் பூசச் சிலிர்ப்பேனோ!

காகிதம் போல் அவள் போகும்

நடையினில்

அசைந்து ஆடியாடி நான் மகிழ்வேனோ!

மாதவள் பாதங்கள் புவியை உரசிட

நிலத்தின்

மேல் இவன் பொறாமை கொண்டேனோ!

இன்னிசை அமைத்து கானம் நழுவிடும்

குரலினில்

தமிழ்ச்சொல்லை நவின்றிட வியப்பேனோ!

நீண்ட கூந்தல் ஆறாய் ஓடும் 

கருமையில்

முங்கி மூழ்கி நான் தொலைவேனோ!

பூவிதழ் மென்னகை தூவும்

நொடியினில்

ஊன் உடல் மெதுவாய் உருகேனோ!

தெய்வந் தொழுகையில் இளையவன் 

மனதினில் 

பூவையின் திருமுகம் நினைவேனோ!

பைந்தமிழ்ச் சொற்கள் பல தரும் 

தமிழில் 

உன் பெயரில் இலக்கியம் படைப்பேனோ!


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்